தற்போதைய செய்திகள்:

♣ என் இனிய வலைப்பூ விருந்தினரே வருக.! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக.! ரமலான் நல் வாழ்த்துக்கள் ♣ .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.

Oneindia.in - thatsTamil

SunPower

Tuesday, February 3, 2009

அறிஞர் அண்ணா நினைவு தினம்:04-02-2009



"நெற்றியில் அறிவை தேக்கி, நெஞ்சத்தில் வீரம் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தை தேக்கி, சுற்றாமல் சுற்றும் கண்ணில் துடிப்பினைத் தேக்கி, மண்ணில் கற்றவர் திகைக்கும் வண்ணம் காண்பவர் ஒருவர் அண்ணா 'என்று கவிஞர் வேழவேந்தன் வாழ்த்துவதற்கு அமைய, நெற்றியில் அறிவைத் தேக்கி, நெஞ்சத்தில் வீரத்தைத் தேக்கி, வற்றாத நாவில் நாளும் வளமுறும் கருத்தைத் தேக்கி வைத்துக்கொண்டு மழைபோல், சொற்பொழிவுகளை பொழிந்தவர் அண்ணா. சுற்றாமல் சுற்றாமல் சுற்றும் தன் கண்ணில் துடிப்பினைத் தேக்கி வைத்த அண்ணா தூங்கிக் கிடந்த தமிழ் இனத்தை துடித்தெழச் செய்தார்.
"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பது முதுமொழி. ஆனால், அண்ணாவின் சிந்தனையும் பேச்சும் எழுத்தும் தமிழகத்தின் கற்றாரை மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்தின் கற்றாரையே திகைப்படையச் செய்தது. எனவே, தான் அண்ணாவின் கன்னிப் பேச்சினை செவிமடுத்த நேரு "இவர் தம் வருகை வரவில் வைக்கப்பட வேண்டியதாகும்' என்று கூறிச் சென்றார்.
காஞ்சி நடராசனுக்கும் பங்காரு அம்மையாருக்கும் 15.09.1909 அன்று தோன்றிய அறிஞர் அண்ணா, 03.02.1969 இல் தனது அறுபதாவது அகவையை எட்டும் போது நம்மை விட்டுப் பிரிந்தார். இந்தியெனும் புற்றுநோய் தமிழினத்தை தாக்குவதை எதிர்த்து போரிட்டு பெரு வெற்றி கண்ட அறிஞர் அண்ணா தன்னை தாக்கிய புற்றுநோயிடம் தோல்வி கண்டார். தமிழக மக்கள் அவர் மீது எவ்வளவு அன்பை வைத்திருந்தனர் என்பதை அவர் மறைந்தபோது அவர்கள் துடிதுடித்து ஐயோ! என்று அலறிய காட்சி சான்று கூறும். அறிஞர் மறைந்ததையடுத்து 04.02.1969 இல் வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பின்வரும் தலைப்புச் செய்தியை வெளியிட்டது.'If tears could bring back a man to life Mr.Annadurai would be living again' (மக்களின் அழுகை ஒரு மனிதனின் உயிரை மீட்க முடியுமென்றால் திரு. அண்ணாதுரை மீண்டும் எம்மிடையே வாழ்ந்திருப்பார்) என்பதேயாகும்.
அண்ணா ஏறக்குறைய 40 ஆண்டுகள் தமிழக அரசியலில், சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதலை உருவாக்கியவர். அவர் முதலமைச்சராக 23 மாதங்கள் தான் இருக்க முடிந்தது. புற்றுநோய் அவரை முற்றுகையிட, அவரது வாழ்வு முடிவுற்றது. எனினும், அவர் பதவி வகித்த 23 மாதங்களில் எம் வழித்தோன்றல்கள் அவரை என்றும் நினைத்துப் பார்க்கின்ற முறையில் வரலாறு வாழ்த்துகின்ற வகையில் தமிழனின் தன்மானம் காக்கவும் அவனின் தனித்துவத்தை நிலைநாட்டவும், தன்மானத் திருமண முறையை (சுயமரியாதை திருமணத்தை) சட்டமாக நிறைவேற்றினார்.
இந்தியை உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தை முறியடித்து இருமொழித் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ் ஆட்சி மொழியாக ஆக்கவும் பக்கத் துணையாக ஆங்கிலம் அமையவும் வழி வகுத்தார்.
சென்னை மாகாணத்திற்கு ""தமிழ் நாடு' என்று பெயர் சூட்டி தமிழனுக்கு ஒரு நாடு உண்டு, அங்கு பேசப்படும் மொழி தமிழ், அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் , அங்கு ஆளும் மொழி தமிழ் என்பதை உலகுக்கு பறைசாற்றினார்.
ஆட்சி மொழி தமிழாக இருக்க வேண்டுமென்பதை வற்புறுத்திய அண்ணா, பயிற்சி மொழி தமிழாக இருந்தால்தான் ஆட்சி மொழி தமிழாக மலர முடியும் என்பதை உணர்ந்து தமிழைப் பயிற்சி மொழியாக்கப்பாடுபட்டார். அவரின் தமிழ் உள்ளத்தை பின்வரும் கூற்று எடுத்துக்காட்டுகிறது.
""தமிழில் பாட மொழி இருக்க வேண்டும் என்று சொல்வது இந்த நாட்டில் தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலம் தான் பாட மொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த இல்லாத விந்தை இங்கேதான் இருக்கின்றது. "தமிழில் கற்பிக்கலாமா? என்னும் கேள்வியும் முடியுமா? என்னும் எதிர்ப்பும் பார்க்கலாம் என்னும் சந்தேகமும் தமிழ் மொழிப் பயிற்சி பெறுபவர்கள் என்ன ஆவார்கள்? இதுவரை பெற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்று இந்த நாட்டிலேதான் பேசப்படுகிறது' என்று அவர் கூறிய கூற்று ஏற்ற முறையில் தமிழைப் பயிற்சி மொழியாக ஆக்க முடியவில்லையே என்று அவருக்கிருந்த ஆழ்ந்த கவலையை எடுத்துக் காட்டுகிறது.
ஈழத்தமிழர்க்காக அன்றே குரல் எழுப்பியவர்
தமிழகத்தின் தலைவர்களில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் சிக்கலையொட்டி இன்று நேற்றல்ல; அன்றே பிரச்சினையை ஆழமாக அறிந்த நிலையில், அறிவு நிலையிலும் உணர்வு நிலையிலும் ஈழத்தமிழருக்காக குரல் எழுப்பியவர் நம் அண்ணா.
இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டபோது சிங்கள அரசின் இனவெறிப் போக்கினை அண்ணா கடுமையாகச் சாடினார். சிறிமாவோசாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ஐந்தரை இலட்சத்திற்கு மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்களை இந்தியாவிற்கு அனுப்ப அன்று ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசு முயன்றபோது அக்கொடிய செயலைக் கண்டித்தவர் நம் அண்ணா.
""சாத்துக்குடி பழத்தின் சாற்றினைப் பிழிந்த பின்பு தூக்கி எறியும் நிகழ்ச்சியே இம்மக்களை வெளியேற்றும் நிகழ்ச்சி' என்று தன் மனிதாபிமான உணர்வினையும் தன் தமிழின உரிமை வேட்கையையும் உணர்த்தியவர் நம் அண்ணா.
ஈழத்தமிழர் மீது 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாகப் போரிட்டபோது வெறிகொண்ட சிங்களக் காடையர்கள் தமிழ் மக்களைத் தாக்கி இனப் படுகொலை செய்ய முயன்றபோது ஓங்கிக் குரலெழுப்பியவர் அண்ணா. தமிழக சட்டமன்றத்திலும் டில்லி மாநில அவையிலும் அவர் ஆணித்தரமாக கூறிய கருத்துகளை சட்டமன்றப் பதிவேடுகளிலும் மாநில அவைப் பதிவேடுகளிலும் காணலாம்.
அவர் தனது "திராவிட நாடு' இதழிலும்,"ஹோம் ?ல்'" ஹோம் லாண்ட்'இதழிலும் தன் தம்பிக்கு எழுதிய கடிதங்களிலும் தலைப்புச் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்களிலும் தன் ஆழ்ந்த அரசியல் அறிவினைக் காட்டும் முறையிலும் சிங்களத் தலைவர்களுக்கு இடித்துரைக்கும் முறையிலும் கூறிய சொற்களை இன்றும் படிக்கின்றபோதும் எம்மை மீறிக் கண்கள் கலங்கும்.
ஈழத்தமிழர் சார்பில் உலக அரங்கமாகிய ஐ. நா. மன்றத்திலும் ஈழத்தமிழர்களுக்காக அறிக்கைகளை அனுப்பி ஈழத் தமிழர் பிரச்சினையை அனைத்துலகப் பிரச்சினையாக்கியவர் நமது அண்ணா.
ஈழத்தமிழர் சார்பில் அண்ணா குரலெழுப்பியபோது, அப்போது பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய வி. கே. கிருஷ்ணமேனன் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது முறையல்ல என்று கூறியபோது, அறிஞர் அண்ணா தனக்கே உரிய தனி நடையில் பொடி போடும் முறையில் "கிருஷ்ணமேனன் பெரிய அரசியல் அறிஞர் என்பதை நான் ஏற்கின்றேன்' என்று கூறிய அவர் "என் வீட்டின் அயலவன் தன் மனைவியை இறுக அணைத்து முத்தம் சொரிகின்ற போது நான் பார்க்கமாட்டேன், மாறாக, வெட்கித் தலைகுனிந்து வேறு இடம் சென்று விடுவேன். ஆனால்,அதே அயலவன் தான் கணவன் என்ற உரிமையில் தன் மனைவியின் கழுத்தில் கத்தி வைக்கின்ற போது, அவள் ஐயோ என்று அலறுகின்ற போது, நான் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது போன்று தான் என் தமிழன் இலங்கையில் கொலைக்கு ஆளாகின்ற போது நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது' என்று அண்ணா கூறிய போது அதற்கு கிருஷ்ணமேனன் பதில் கூறியதாக நாடாளுமன்றப் பதிவேட்டில் எந்தக் குறிப்பும் இல்லை.
அந்தளவிற்கு தூய்மையோடு, தெளிவோடு, துணிவோடு, ஈழத்தமிழர் அழிவைத் தடுக்க முனைந்தவர் நம் அண்ணா என்பதை நாம் மறக்க முடியாது. அரசியலில் வசதிக்காக ஈழத்தமிழன் அழிவைப் பற்றி அக்கறை கொள்ளாது அமைதி மேற்கொண்டுள்ள அண்ணாவின் தம்பிமார்கள் அண்ணா அன்று பேசிய பேச்சுகளை, ஏற்றமிக்க கட்டுரைகளை, அறிக்கைகளைப் படித்து தம் மறதியைப் பற்றி போக்கிக் கொள்வது வரலாறு. அவர்கள் மீது வசைபாடாதிருக்கத் துணை நிற்கும். அண்ணாவின் உணர்வில் ஊறிய நம் கவிஞர் வேழவேந்தன் ஈழத்தமிழர் நிலையைப் பற்றி எம்மை அப்படியே ஆட்கொள்ளுகின்ற முறையில் பின்வருமாறு பாடிச் சென்றுள்ளார்.
"தாய்நாட்டு தமிழனுக்கோ இந்தித் தொல்லை: தணல் போன்று சிங்களமோ உனக்குத் தொல்லை! நாய்வாழ்வு வாழுதடா தமிழ்ச்சாதி நாகரிக முதல் மனிதன் நீயா? வெட்கம்! ஓய் தமிழா! உலகத்து ஐ.நா. மன்றில் உனக்காக வாதாட ஒருவர் தேவை! பாய்போட்டே உறங்கியது போதும்: இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு.
ஆம், நம் கவிஞர் வேழவேந்தன் கூறுவதற்கமைய, உலகத்து ஐ. நா. மன்றத்தில், தமிழன் அழிவைத் தடுக்கின்ற குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டியது தமிழகத்தின் தலையாய கடமை. "பாய்போட்டே உறங்கியது போதும் இன்றே பாழ்விழியைத் திறந்து விட்டுக் கழுவாய் தேடு' என்ற வேழவேந்தன் கூற்றுக்கு ஈழவேந்தனாகிய நாமும் வழிமொழி கூற விரும்புகின்றோம். அண்ணா மனம் திறந்து வாழ்த்திய கவிஞன் வேழவேந்தன் என்பதற்கு அண்ணா வேழவேந்தன் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை சான்று கூறும்.
அறிஞர் அண்ணா இன்று உயிருடன் இருந்து தன் தலையை அசைத்தால் ஆயிரம் படைகள் கூடுவது உறுதி. அண்ணா நா அசைத்தால் அணுவெல்லாம் வீரம் பாடும். அண்ணா கண் அசைத்தால் ஆதிக்கம் அசைந்தே ஆடும். அன்னவர் விரல் அசைத்தால் அடுபகை நடுங்கி ஓடும். அத்தகைய அண்ணா எம்மிடம் இன்று இல்லை. எனினும், அண்ணாவின் அருமைத் தம்பிமார்கள் என்று உரிமை கொண்டாடுகின்ற தம்பிமார்கள் அண்ணாவின் சிந்தனை வழி செயற்பட வேண்டுமென்பது எமது விடுதல் அறியா விருப்பம்.
பல்துறை அறிஞன்
அண்ணா எண்ணாத துறையே இல்லை. கதைகளால், நாடகத்தால், கட்டுரைத் திறத்தால், பேச்சால் சிதைவிலாக் கருத்தை ஆக்கி சிந்தனை விருந்து வைக்கும் புதையலாய் விளங்கினார் அண்ணா. அவர் உண்மையில் இந்நாட்டின் புதிய சமையற்காரர் என்று கூறுவது முற்றும் பொருந்தும்.இவற்றையெல்லாம் நினைவு கொண்டுதான் நம் தமிழ்த் தென்றல் திரு. வி. க.; அண்ணாவைப் பற்றி அன்றே போற்றிப் பாடிய பாடலில்;
"அண்ணா துரையென்னும் அண்ணல் தமிழ்நாட்டு வண்ணான் அழுக்கெடுப்பில் வாய் மொழியில் பண்ணாவான் சிற்பனெழுத் தோவியத்தில் செவ்வரசு நாவாயின் அற்புதஞ்சூழ் மாலுமியென்றாடு' என்று போற்றிய உரை வெறும் புகழுரை அல்ல. மாறாக பொருள் பொதிந்த பொன்னுரை என்பதனை அண்ணாவின் வாழ்வு எமக்கு உணர்த்தியுள்ளது.வரலாறு தருகின்ற தீர்ப்பும் அதுவேயாகும் [நன்றி: தினக்குரல்]
வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா
இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று அறிஞர் அண்ணா சொன்னதாக ஒரு கட்டுரையை படித்தேன், அதை அப்படியே கீழே தருகிறேன். பிறகு இக்கட்டுரையின் கீழே "ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம் தரப்பட்டுள்ளது", அதையும் படியுங்கள். இதை படிக்கின்ற உங்கள் கையிலேயே முடிவை விட்டுவிடுகின்றேன்.

வாளால் வளர்ந்ததா இஸ்லாம்? அறிஞர் அண்ணா பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றதுதான் இஸ்லாம். இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.
பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு. இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடி பேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று. தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
தொகுப்பு : தமிழண்ணா

No comments:

NOTICE BOARD

இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு. அன்றொரு காலம் இருந்தது: திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்.. ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம். இன்றொரு காலம் இருக்கிறது: இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது.. வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே! உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா? சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா? தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா? நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்.... ((((( 2 ))))) அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும் என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்? துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது. இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது! படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது. குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? ((( 3 ))) நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில் முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும். சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்... நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது. ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு? நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே! முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்! ''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும் ''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!! இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ; திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார். சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்! நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால் ........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள். இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்... சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்... நாஞ்சில் தமிழ்.

திக்ருகள்‏

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திக்ருகளின் சிறப்புகள் : فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ 'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152) நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ '(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205) திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான். يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42) அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல. لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم) 'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்) திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும். மற்றொரு ஹதீஸில், அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள். அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) மற்றொரு ஹதீஸில், அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்
இதை Print செய்து தேவையான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம்.