தற்போதைய செய்திகள்:

♣ என் இனிய வலைப்பூ விருந்தினரே வருக.! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக.! ரமலான் நல் வாழ்த்துக்கள் ♣ .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.

Oneindia.in - thatsTamil

SunPower

Monday, February 8, 2010

அன்பைப் பரிமாறுவோம் - ( மவ்லவீ ஹாஃபிழ் டி.எம். முஜிபுர் ரஹ்மான் சிராஜி, திருப்பூர் )

அன்பு பரிமாற்றம்
மனிதர்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு, நேசம், நட்பு ஆகியன நீடித்து நிலை பெறுவதற்குரிய காரணிகளை அண்ணலார் (ஸல்) அவர்கள் தங்களின் வாழ்வின் மூலம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவைகளில் ஒன்று அன்பளிப்புகளை பரஸ்பரம் வழங்கிக் கொள்வது. அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அதற்கு பதிலாக (அதே சமயம் அல்லது வேறொரு சமயத்தில்) தாமும் ஏதேனும் வழங்குவார்கள்”.
(நூல்: புகாரீ 2585)
அன்பளிப்பு பொருட்களை வாங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் நாமும் அதற்கு பிரதியாக அன்பளிப்புகளை நம்மால் இயன்றளவு செய்ய வேண்டும் என்பதை அண்ணலார் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் செய்து காட்டி நமக்கு வழிகாட்டுகிறார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் எவர் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டு அவரிடம் கொடுப்பதற்கு ஏதேனும் இருந்தால் அதற்கு பதிலாக தனக்கு அன்பளிப்பு செய்தவருக்கு அன்பளிப்பாக கொடுக்கவும். எதுவு மில்லையென்றால் (நன்றி கூறும் வகையில்) கொடுத்தவரை புகழட்டும். ஏனெனில் யார் புகழ்ந்தாரோ அவர் நிச்சயமாக நன்றி செலுத்தி விட்டார். யார் (புகழவில்லையோ மாறாக உபகாரத்தை) மறைத்தாரோ அவர் நன்றி மறந்தவராவார்.
“அறிவிப்பாளர் : ஹள்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரளி)
(நூல்: அபூதாவூது – 4813)
இந்த நபிமொழி மூலமாக அன்பளிப்புக்கு பிரதி உபகாரமாக நாமும் ஏதாவது ஒரு வகையில் அன்பளிப்பு வழங்கியவருக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அன்பு நீடிக்க காரணமாகும் என்பதை அறிகிறோம்.அன்பளிப்பில் அளவு பார்க்க வேண்டாம்
நம் வாழ்வில் பல்வேறு வைபவங்களில் விசேஷங்களில் அன்பளிப்பு செய்கிறோம். அல்லது அன்பளிப்பு பெறுகிறோம். அன்பளிப்பு செய்வதிலும் பெறுவதிலும் மனிதர்களுக்கு மனிதர் ஒருவருக்கோர் வித்தியாசப்படலாம். வசதியானவர்கள் உயர்வான அன்பளிப்பு பொருளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழ்மையானவர் அவரின் சக்திக்கு தக்கவாறு அன்பளிப்புகளை பரிமாற்றம் செய்து கொள்வர். ஏழையோ, பணக்காரரோ உயர்ந்த அன்பளிப்பு பொருளோ சிறிய அன்பளிப்பு பொருளோ இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. எல்லாவற்றையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையாகும். அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். “ஒரு ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி. அதைப் பெற்றுக் கொள்வேன்” என்று கூறிய அண்ணலார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் பெண்களே ! ஓர் அண்டை வீட்டுக்காரி மற்றொரு அண்டை வீட்டுக்காரிக்கு ஒரு ஆட்டின் குளம்பை அன்பளிப்பாக கொடுத்தாலும் அதைக் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள் இழிவாக கருத வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: புகாரீ 2566 -2568
அன்பளிப்பு செய்பவரின் அன்பைத்தான் காண வேண்டுமே தவிர அவரின் அந்தஸ்தையோ அன்பளிப்பு பொருளின் தரத்தையோ பார்க்க கூடாது. அண்ணலாரின் வரலாற்றில் அன்பளிப்பு செய்ய வந்த ஒரு ஏழைப்பெண்மணியிடம் அன்னார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது அன்பளிப்பு பெறுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். மதீனா நகரில் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு பலர் அன்பளிப்பு கொடுத்து அதன் மூலம் மனம் நிறைவடைவார்கள். சிலர் தின்பண்டத்தை சிலர் பழங்களை என்று அவரவர்களுக்கு பிடித்தமான பொருளை மனமுவந்து அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கு வார்கள். ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் தோழர்கள் சூழ மஸ்ஜிதில் அமர்ந்திருந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு திராட்சை பழக்கொத்து ஒன்றை கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கி அதை புசிக்குமாறு வேண்டி பணிவுடன் நின்றார். தோழர்களுக்கு மத்தியில் அமர்ந்து எதை சாப்பிட நேர்ந்தாலும் அதை தோழர்கள் எல்லோருக்கும் பகிர்ந்து வழங்கி விட்டு பின்பு தான் அண்ணலார் (ஸல்) அவர்கள் உண்பார்கள். ஆனால் இப்போது அந்தப் பெண்மணி கொடுத்த திராட்சை பழக்கொத்தில் ஒன்றை ருசித்த அண்ணலார் (ஸல்) அவர்கள் தொடர்ந்து எல்லா பழங்களையும் ஒன்று கூட விடாமல் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள். யாருக்கும் வழங்கவில்லை. பரிசளித்த அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. நான் வழங்கிய எல்லா திராட்சையையும் அண்ணலார் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதை கண்டு மனம் நிறைவடைந்து அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று சென்றார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோழர்களுக்கு ஆச்சரியம் தாளவில்ல. எந்த ஒரு தின் பொருளையும் பகிர்ந்தளித்து சாப்பிடும் அண்ணலார் (ஸல்) அவர்கள் இந்த தடவை தங்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட திராட்சையி லிருந்து ஒன்று கூட யாருக்கும் வழங்கவில்லையே ! என்ன காரணம்? இது குறித்து அண்ணலார் (ஸல்) அவர்களிடமே சில தோழர்கள் கேட்டும் விடுகிறார்கள். அதற்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் அளித்த பதில்! “தோழர்களே ! அந்த பெண்மணி மிக அன்போடு திராட்சை குலைகளை எனக்கு வழங்கினார். அதை ருசித்த நான் அந்த பழங்கள் மிக புளிப்பாக இருப்பதை உணர்ந்தேன். அதை உங்களுக்கு யாருக் காவது கொடுத்தால் “புளிக்கிறது” என்று கூறுவீர்கள். அல்லது முகத்தையாவது சுளிப்பீர்கள். இதனால் அந்தப் பெண்மணியின் மனம் நோகி விடும். எனவே தான் அந்தப் பெண்மணி மனம் சங்கடப்படக் கூடாது. சந்தோஷம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான் திராட்சைப் பழங்கள் முழுவதையும் அது புளிப்பாக இருந்தும் நானே சாப்பிட்டு விட்டேன். இதைக் கண்டு அந்தப் பெண்மணியும் மனநிறைவோடு சென்று விட்டார்” என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அண்ணலாரின் இந்த பதில் தோழர்களை நெகிழச் செய்து விட்டது. எனவே அன்பளிப்பு பெறுபவர்கள் அன்பளிப்பு செய்பவரின் அன்பைத் தான் காண வேண்டும். அந்தஸ்தை அல்ல.
அன்பளிப்பில் ஹராம் ! ஹலால் !
நம்முடைய வாழ்வில் கொடுக்கல், வாங்கல், உணவு மற்றும் எல்லா நிலைகளிலும் ஹராம் மற்றும் ஹலால் பேணி வாழ வேண்டும். அது போன்று அன்பளிப்பு பெறுகிற விஷயத்தில் ஹராம் ஹலாலை பேணிக் கொள்ள வேண்டும். இது நடக்கிற காரியமா? அன்பளிப்பு செய்பவரின் தொழிலை நாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? என்றெல்லாம் நம் மனதில் வினா எழலாம். ஆனால் நமக்கு வழி காட்டிகளாக திகழ்ந்த வலிமார்கள், ஆன்றோர்கள் அன்பளிப்பு பெறு வதில் மிகுந்த பேணுதலை கடைபிடித்துள்ளார்கள். மஹ்பூபே சுப்ஹானி ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (ரளி) அவர் களின் வரலாற்றில் ஒரு சான்றை பார்ப்போம். மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் அருளுரை (பயான்) வழங்குகிறார்கள் என்றால் அதைக் கேட்டு பண்படைய லட்சக்கணக்கில் மக்கள் திரளுவார்கள். ஒரு நாள் அவர்களின் உரையை கேட்க வந்த லட்சக்கணக்கான மக்களில் கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அவர்களும் ஒருவராக அமர்ந்திருந்தார். நீண்ட நெடிய உரையை மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் முடித்தவுடன் அவர்களை கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் அணுகி தான் கொண்டு வந்திருந்த பத்து பைகள் நிரம்பிய பொற்காசுகளை அன்பளிப்பாக வழங்கி அதை ஏற்க வேண்டும் என பணிவுடன் வேண்டி நிற்கிறார். அதைப் பெற்றுக் கொண்ட மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் அவை களில் இருந்து இரண்டு பைகளை எடுத்து தங்கள் கைகளால் பழத்தை பிழிவது போன்று பிழிகிறார்கள். அப்போது அனைவரையும் அதிர்ச்சி யடைய வைக்கும் ஒரு காட்சி நிகழ்கிறது. பிழியப்பட்ட அந்தப்பையில் இருந்து இரத்தம் பீறிட்டு வழிகிறது. கலீபா முஸ்தன்ஜித் பில்லாஹ் முதற்கொண்டு அங்கிருப்பவர்கள் எல்லாம் அதிர்ச்சியுடன் அதைப் பார்க்கிறார்கள். அப்போது மஹ்பூபே சுப்ஹானி (ரளி) அவர்கள் கூறு கிறார்கள். “என்ன பொற்காசுப் பையிலிருந்து இரத்தம் வழிகின்றது என்று பார்க்கிறீர்களா? இது என்ன தெரியுமா? உங்கள் ஆட்சியில் மக்களை கொடுமைப்படுத்தி அவர்களைப் பிழிந்து எடுத்த இரத்தமாகும். (அதாவது தவறான ஆட்சியின் மூலம் மக்களை கொடுமைப்படுத்து கிறீர்கள்) இனிமேலாவது மக்களுக்கு நேர்மையான நீதியான ஆட்சியை வழங்குங்கள் என்று கூற, அதைக் கண்ணுற்ற கலீபா மயக்கமுற்று கீழே சாய்கிறார்கள். அப்போது அங்கிருப்பவர்களை நோக்கி மஹ்பூபே சுப்ஹானி அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறேன். இவர் மட்டும் அண்ணலார் (ஸல்) அவர்களின் சிறிய தகப்பனார் ஹள்ரத் அப்பாஸ் (ரளி) அவர்கள் வழித்தோன்றலாக இல்லாதிருந்தால் இவருடைய அரண்மனை வரை இந்த இரத்தத்தை பாய்ந்தோடச் செய்திருப்பேன். ஆனால் இவர் என் உயிரினும் மேலான அண்ணலார் (ஸல்) அவர்களின் குடும்பத்தை சார்ந்தவராகவல்லவா இருக்கிறார் என்று கூறினார் கள். எனவே அன்பளிப்பை பெறுகிற போதும் ஹராம் ஹலாலை பேணுவது நன்மை தரும் செயலாகும். அப்படியே ஹராமான வருவாய் உள்ளவரால் அன்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றால் அதை நாம் உபயோகம் செய்யாமல் வேறு ஏழை எவருக் காவது அதை பயன்படுத்த வழங்கி விடலாம். இதுவும் பேணுதல் மிகுந்த செயலாகும்.
அல்லாஹ்வின் நினைவை அருளும் அன்பளிப்புகள்
இன்று வழங்கப்படும் அன்பளிப்பு பொருட்கள் பல்வேறு பயன்களை நல்கும் விதமாக அமைகிறது. அன்பளிப்பாக வழங்கப்படும் அலங்கார விளக்குகள் அதிசயிக்கத்தக்க வகையில் ஒளியால் கண்சிமிட்டி மகிழ்வை தருகிறது. மேலும் வாட்ச், கடிகாரம் மணிபார்க்க உதவுகிறது. மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் பல்வேறு பலன்களை வழங்கு கிறது. ஆனால் மார்க்க ரீதியான தீனுக்கு சாதகமாக ஏதாவது அன்பளிப்புகள் பரிமாற்றம் செய்யப்படுகிறதா? என்று பார்த்தால் அது மிகவும் குறைவு. ஆனால் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக திகழும் ஸஹாபாக்கள் வாழ்வில் அன்பளிப்பு பரிமாற்றங்கள் அல்லாஹ்வை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்திருந்ததை வரலாற்றில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. இறையச்சம் நிரம்பப் பெற்ற சாதாரண ஒரு ஏழைப் பெண்மணிக்கு “அந்தப் பெண் இறையச்சம் உடையவளாக இருக்கிறார்” என்ற ஒரே காரணத்தால் கலீபா என்ற ஜனாதிபதி பதவியை வகிப்பவர் தன் மகனையே “அன்பளிப்பாக” வழங்கி திருமணம் செய்து கொடுத்திருப்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் சொல்லும் கலீபா உமர் (ரளி) அவர் களின் ஆட்சி காலம் அது !இரவு நேரங்களில் வலம் வந்து மக்களின் குறைகளையும் குமுறல்களையும் ஊரின் நிலைமையையும் அணிந்து அதற்கேற்றார் போல் துரித நடவடிக்கை எடுப்பது ஹள்ரத் உமர் (ரளி) அவர்களின் ஆட்சி முறை! வழக்கம் போல் ஒரு நாள் இரவு கலீபா ஹள்ரத் உமர் (ரளி) அவர்களும், அவர்க்ளின் பிரியமான தோழர் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி) அவர்களும் நகர் வலம் வருகிறார்கள். ஒவ்வொரு வீதியாக வந்து இறுதியாக குடிசை குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்கு வருகிறார்கள். அப்போது ஒரு குடிசையினுள் வயோதிகப்பெண்மணி ஒருவரும் இளம்பெண் ஒருவரும் பேசும் ஓசை குடிசை தாண்டி கலீபாவின் காதுகளில் விழுகிறது. வயோதிகப் பெண்மணி கூறுகிறாள். “நாளுக்கு நாள் நமக்கு வறுமை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எனவே இனிமேல் நாம் விற்பனை செய்யும் பாலில் தண்ணீரை கலந்து விற்றால் தான் நமக்கு கட்டுப்படியாகும்” இதற்கு அந்த இளம் பெண் பதறியடித்தவளாக பதில் தருகிறாள் “வேண்டாம்மா! ஒருபோதும் கலப்படம் செய்து வியாபாரம் செய்யக்கூடாது. இது நம் நாட்டின் கலீபா அவர்களின் உத்தரவு!” இதனைக் கேட்ட அந்த தாய் “கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும்.நாம் கலப்படம் செய்வது கலீபாவுக் கோ, அல்லது அதிகாரிகளுக்கோ தெரிந்தால் தானே பிரச்சனை ! நாம் இரவோடு இரவாக பாலைக் கறந்து தண்ணீரை கலந்து விடலாம்” என்று கூறுகிறார். உடனே அந்த இளம் பெண் “இந்த நடுஇரவில் நாம் பாலில் தண்ணீர் கலப்பது கலீபாவுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் போகலாம். ஆனால் உன்னையும் என்னையும் இந்த பேருலகத்தையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு தெரியாமலா போகும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறானே ! என்று பதில் பகர்கிறார். குடிசையில் இருந்து வந்த இந்த உரையாடலை கேட்ட வண்ணமாக அவ்விடத்தை விட்டும் அகன்ற கலீபா உமர் (ரளி) அவர்கள் தன் நண்பரிடம் “வறுமையிலும் வழி தவறாமல் நேர்மையை யும் இறையச்சத்தையும் கடைபிடிக்கும் இந்த இளம்பெண்ணுக்கு என்ன பரிசளிக்கலாம்?” என்று வினவுகிறார்கள். நண்பர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்(ரளி) அவர்கள் “நேர்மை தவறாத தக்வாவுடைய அந்தப் பெண்மணிக்கு ஆயிரம் திர்ஹம் வரை பரிசளிக்கலாம்” என்று பதில் பகர்கிறார்கள். ஹள்ரத் கலீபா (ரளி) அவர்கள் “இல்லையில்லை. அதைவிட அதிகமாக உயர்ந்த அன்பளிப்பு ஒன்றை நான் அளிக்கலாம் என எண்ணியுள்ளேன்” என்று கூறினார்கள். அப்படி என்ன உயர் அன்பளிப்பு? என புரியாமல் நண்பர் கலீபாவை பின் தொடர்ந்து வீட்டுக்கு வருகிறார்கள்.

மறுநாள் காலை கலீபா அவர்களின் இருப்பிடத்திற்கு அந்தப் பெண்ணும் அவளின் தாயாரும் வரவழைக்கப்படுகிறார்கள். இருவரும் கலீபா அவர்கள் ஏன் தங்களை அழைத்துள்ளார்களோ? என்று மனதில் பதறியபடி நிற்கிறார்கள். அவர்களை கலீபா அவர்கள் கனிவோடு அமரச் சொல்கிறார்கள். பின்பு தனக்கருகில் நின்றிருந்த தனது அருமை மகனை அழைத்து இரவில் நகர்வலம் சென்ற போது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொல்லி “இது போன்ற இறையச்சம் நிறைந்த ஒரு பெண் தான் உனக்கு மனைவியாக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். நீ என்ன எண்ணுகிறாய்? என வினவுகிறார்கள். அதற்கு கலீபா அவர்களின் மகனார் “நான் இந்தப் பெண்ணை மனப்பூர்வமாக திருமணம் செய்ய விரும்புகிறேன்” எனக் கூறினார்கள். இங்கு அந்தஸ்து அழகு செல்வாக்கு என்று எந்த உலகாதய நோக்கமும் பார்க்கப்படவில்லை. அந்த ஏழைப்பெண் “இறையச்சம் மிகுந்தவளாக இருக்கிறாள்” என்ற ஒரே மறு உலக அம்சத்தை தகுதியாக பார்த்து தன் அருமை மகனை அந்தப்பெண்ணுக்கு கணவராக ஆகும் பேறை கலீபா அவர்கள் அன்பளிப்பு செய்கிறார்கள். இருவருக்கும் எளிமையான வகையில் திருமணம் நடைபெறுகிறது. இதுபோன்று நாம் வழங்கும் அல்லது பெறும் அன்பளிப்புகள் மறுமைக்கு சாதகத்தை ஏற்படுத்தும் வகையில் நன்மையை நல்கும் அம்சமாக அமைவது மிகவும் பலன் தரத்தக்க விஷயமாகும்.

அழிவைத்தரும் அன்பளிப்புகள்
அன்பளிப்பு பரிமாற்றம் என்பது பரஸ்பரம் அன்பு, நட்பு, உறவு, என்ற அம்சத்தின் அடிப்படையில் அமைவது அன்பளிப்பின் மரபு. அதே வேளையில் தற்போது ”காரியம் சாதித்துக் கொள்ளும் “லஞ்சமாக” வும் அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இது அன்பளிப்பின் நன்மையை சிதைத்து அழிவுப் பாதையில் தள்ளி விடும். ஹள்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் தனது ஆழ்ந்த ஆதங்கத்தை “தற்கால அன்பளிப்பு பரிமாற்ற” விஷயங்களில் வெளியிடுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களின் காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது. தற்காலத்தில் அது லஞ்சமாக மாறிவிட்டது” என தனது வருத்தத்தை வெளியிடுகிறார்கள். ஆன்றோர்களின் வாழ்வில் ஒரு சான்றை பாருங்கள்.
மவ்லானா அஷ்ரப் அலீதானவி (ரஹ்) அவர்களிடம் ஒரு நபர் வருகின்றார். ஒரு பொட்டலத்தை நீட்டி மவ்லானா அவர்களே ! இதை எனது அன்பளிப்பாக ஏற்க வேண்டும் ! என பணிவுடன் நீட்டுகிறார். வந்த நபர் புதிய நபர் என்பதாலும் அந்தப் பொருள் என்ன என்று தெரியாததாலும் மவ்லானா அவர்கள் “இது என்ன?” என்று வினவு கிறார்கள். இது எனது தோட்டத்தில் விளைந்த கரும்பிலிருந்து எடுக்கப் பட்ட சர்க்கரை ! என்று அந்த நபர் பதில் கூற அதை வாங்கிய மவ்லானா தன்னை சுற்றிலும் அமர்ந்துள்ள தனது மாணவர்களான உலமா பெருமக்களுக்கு பகிர்ந்து கொடுத்து தானும் சிறிதளவு சுவைக் கிறார்கள். சர்க்கரையை அனைவரும் சுவைத்த பின்பு அந்த நபர் மவ்லானா அவர்களை அணுகி “எனக்கு தாங்கள் பைஅத் செய்து கொடுத்து என்னை தங்களின் முரீ தாக்கிக் கொள்ள வேண்டும்” என்று பணிவுடன் வேண்டுகிறார். அதற்கு மவ்லானா அவர்கள் “நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது. இப்போது தான் அறிமுகம் ஆகி உள்ளீர் கள். மேலும் பைஅத் ஆக வேண்டுமெனில் அதற்கு பல நன்னடத்தை விதிமுறைகள் உள்ளது. அதில் பூர்ணத்துவம் பெற்ற பின்பு தான் பைஅத் வழங்க முடியும் ! என தனது நிலையை விளக்குகிறார்கள். மவ்லானா அவர்களின் இந்த பதில் அவருக்கு கோபத்தை ஏற்படுத்து கிறது. “என்னை முரீதாக்கிக் கொள்ளவில்லையானால் எனது சர்க்கரையை திருப்பித் தாரும்!” என்று ஆவேசமாக கூறுகிறார். இதைக் கேட்டு மவ்லானாவும் சுற்றியிருந்தவர்களும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏதோ உள்நோக்கம் ஒன்றை வைத்து தான் இவர் சர்க்கரையை அன்பளிப்பு செய்துள்ளார். அன்பளிப்பு செய்ததை திருப்பி கேட்கிறாரே ! எல்லோருக்கும் அதை பகிர்ந்து கொடுக்கப்பட்டு விட்டதே! என்ன செய்வது? என மனதில் பரிதவித்தவாறு மவ்லானா அவர்களும் சுற்றி யிருந்த உலமா பெருமக்களும் அந்த நபரை அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைக்கிறார்கள். இனிமேல் அன்பளிப்பு பொருளை பெறு வதில் மிக ஜாக்கிரதையை கையாள வேண்டும். காரியம் சாதித்துக் கொள்ள அன்பளிப்பு தற்காலத்தில் வழங்கப்படுகிறது என்பதை மவ்லானா அவர்கள் வருத்தத்துடன் உணர்கிறார்கள்.
“(ஒருவர் அன்பளிப்பு செய்துவிட்டு அதை திரும்பக் கேட்டான் என்றால் வாந்தி எடுத்து அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன்”
(அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி)
நூல் : புகாரி
என்று அண்ணலார் (ஸல்) அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆக அன்பளிப்பு என்பது அன்பு, நட்பு, உறவு ஆகியவற்றை பரிமாற்றம் செய்ய இருக்க வேண்டுமே தவிர காரியம் சாதிக்க உதவும் லஞ்சமாக அமைந்து விடக்கூடாது.
எந்தப் பொருளை அன்பளிப்பு செய்யலாம் ?
அன்பை பரிமாற இன்று எத்தனையோ பொருட்கள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகின்றன. அன்பளிப்புப் பொருட்களில் சிலருக்கு மிகவும் மனம் கவர்ந்த பொருட்களும் இருக்கத்தான் செய்கின்றன. அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உகந்த அன்பளிப்புப் பொருள் யாது? ஹள்ரத் சுமாமா அவர்கள் கூறுகிறார்கள். “அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு எவராவது வாசனைத் திரவியத்தை அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை நிராகரிக்க மாட்டார்கள்”
(புகாரி – 2582)
இதுபோன்று தற்காலத்தில் சமுதாயத்திற்கு மிகவும் பலன் தரத்தக்க அன்பளிப்புப்பொருள் என்னவெனில் பயனுள்ள வழிகாட்டும் நெறி நூல் களை அன்பளிப்புச் செய்யலாம். அன்பை பரிமாறவும் அறவழியை வளர்க்கவும் நூல் பரிமாற்றங்கள் நிச்சயம் துணை நிற்கும். அறிஞர் ஷேக்சஅதி அவர்களின் வரலாற்றில் ஒரு சான்றை இதற்கு சாட்சியாக கூறலாம்.
குலிஸ்தான், பூஸ்தான் போன்ற புகழ் பெற்ற காவிய நூல்களைப் படைத்த ஷேக்சஅதி அவர்கள் ஒரு பயணக்குழுவுடன் சேர்ந்து பார சீகத்திலிருந்து ஈராக்கிற்கு பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரப் பயணம். 13 நாட்கள் கடந்து 14 நாட்கள் காலையில் இவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று கொள்ளையர் கூட்டம் ஒன்று பயணக்கூட்டத்தை சுற்றி வளைத்தது. பயணிகள் திசைக்கொருவராக சிதறி ஓடுகிறார்கள். சஅதி அவர்கள் மட்டும் துணி வோடு இருந்த இடத்தை விட்டும் அகலாமல் பயணப்பொருளோடு நிற்கிறார். உத்தரவிட்டுக் கொண்டிருந்த (?) கொள்ளையர் கூட்டத் தலைவன் ஓடாமல் நிற்கும் சஅதி அவர்களுக்கு அருகில் வருகிறான். சஅதி அவர்கள் அவனைப்பார்த்து தன் பயணப்பொருட்களை சுட்டிக் காட்டி “இதோ! இந்தப் பையில் முழுவதும் புத்தகங்கள் தான் இருக் கின்றன. இவற்றை நான் மனப்பூர்வமாக உமக்கு அன்பளிப்புச் செய்கிறேன். ஆனால் என் கவலை என்னவெனில் நான் பொக்கிஷ மாக கருதும் இந்த புத்தகங்களை நீ நல்ல முறையில் உபயோகப் படுத்த வேண்டும் என்பது தான்!” என்றார். அதற்கு கொள்ளையர் தலைவன கிண்டலான தொனியில் “இதை எப்படி நான் உபயோகிப்பது? என்று வினவ! ஒரு நல்ல ஆசிரியரை நியமனம் செய்து உனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கச் சொல். அந்த ஆசிரியருக்கு சம்பளம் நான் கொடுக்கிறேன்! என்று சஅதி கூறுகிறார். இந்த புத்தகங் களை எனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதால் என்ன பலன்? என்று அவன் மீண்டும் கேட்க; பிறர் பொருளை அபகரிப்பதும் களவாடு வதும் எவ்வளவு கொடிய செயல்! என்றும் அதன்மூலம் பாதிக்கப்பட்ட வர்கள் எவ்வளவு துன்பம் வேதனை அடைகிறார்கள் என்பது உனது குழந்தைகளுக்காவது தெரிய வேண்டாமா? என்று சஅதி சொன்னவுடன் சாட்டையடி பட்டவனாக கொள்ளையத் தலைவன் உணர்கிறான். மனதில் ஏதோ ரசாயண மாற்றங்கள் ஏற்படுவதைப் போன்று உணர்கிறான்.
உடனே ஷேக் சஅதி அவர்களின் கரங்களைப்பற்றி தம் அதரங்களில் ஒற்றிக் கொண்ட அவன் “பெரியவரே! என் கண்களையும் என் மனதை யும் திறந்து விட்டீர்கள். இத்தனை நாள் தவறான பாதையில் சென்று கொண்டிருந்த என்னை எவரும் ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் என்னைக் கண்டு பயந்து ஓடினார்கள். ஆனால் நீங்கள் துணிச்சலான முறையில் என் முன் நின்றதோடு மட்டுமல்லாமல் எனக்கு அறிவுரை கூறி விட்டீர்கள். இனிமேல் நான் எந்த காரணம் கொண்டு இந்த தவறான தொழிலின் பக்கம் செல்ல மாட்டேன். இனிமேல் நானும் எனது கூட்டத் தினரும் உழைத்து பாடுபட்டு எங்கள் வாழ்க்கையை கழிப்போம்” என நெகிழ்வோடு கூறிய அவன் சஅதி அவர்களிடம் ”பெரியவரே! தயவு கூர்ந்து நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களை எனக்கு கொடுத்தீர்கள் என்றால் நான் திருந்தி வாழவும் அறவழியில் செல்லவும் எனக்கு அது பயன்படும். என்று வேண்டுகோள் விடுக்க ஷேக் சஅதி அவர்கள் மிகவும் மகிழ்ந்து அந்தப் புத்தகப்பை அனைத்தையும் அவனுக்கு அன்பளிப்புச் செய்து அவன் நேர்வழி நடப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த வரலாற்று சம்பவத்தைப் போன்று அன்பளிப்பாக சிறந்த நூல்கள். மார்க்க தத்துவ நூற்களை அன்பளிப்புச் செய்தால் அது சிறந்த நற்பலனை நல்கும் என்பதில் சந்தேகமில்லை. நவீன இந்த யுகத்தில் அன்பளிப்பாக “கிஃப்ட் ஹாம்பர்” வழங்குவதைப் போன்று “குர் ஆனின் குரல்” போன்று தரமான இஸ்லாமிய மாத இதழ்கள் வருகின்றன. அவைகளுக்கு ஒரு வருடமோ அல்லது அதற்கு அதிகமாக நம்மால் முடிந்த அளவு சந்தா செலுத்தி யாருக்கு அன்பளிப்பு செய்ய நினைக் கிறோமோ அவர் பெயரில் இதழ்களை அனுப்பி வைக்கச் செய்யலாம். இதுபோன்று நல்ல புத்தகங்கள் அன்பளிப்பு செய்வதால் “அன்பளிப்பு செய்த திருப்தி நமக்கு ஏற்படுவதோடு அறவழியை காண்பித்த நன்மை யும் கிடைக்கும். எனவே நம் உறவுகள், நட்புகள், தோழமைகள் ஆகி யோருக்கு மத்தியில் அண்ணலார் (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்வோம். அன்பை நீடித்து நிலைபெறச் செய்வோம். அல்லாஹ் நல்லுதவி புரிவானாக.
நன்றி : குர்ஆனின் குரல் ( மே 2009 )

No comments:

NOTICE BOARD

இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு. அன்றொரு காலம் இருந்தது: திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்.. ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம். இன்றொரு காலம் இருக்கிறது: இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது.. வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே! உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா? சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா? தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா? நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்.... ((((( 2 ))))) அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும் என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்? துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது. இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது! படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது. குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? ((( 3 ))) நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில் முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும். சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்... நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது. ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு? நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே! முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்! ''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும் ''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!! இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ; திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார். சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்! நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால் ........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள். இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்... சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்... நாஞ்சில் தமிழ்.

திக்ருகள்‏

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திக்ருகளின் சிறப்புகள் : فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ 'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152) நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ '(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205) திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான். يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42) அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல. لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم) 'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்) திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும். மற்றொரு ஹதீஸில், அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள். அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) மற்றொரு ஹதீஸில், அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்
இதை Print செய்து தேவையான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம்.