"விடிஞ்சும் இப்படியா கும்பகர்ணன் மாதிரி தூங்கறது? ஒரு நேரம் காலம் வேணாம்..." என்ற சுப்ரபாதமெல்லாம் இன்றைய வீடுகளில் கேட்க முடிவதில்லை. அரைத் தூக்கத்துடன் ஸ்பெஷல் கிளாஸ்களுக்கும், ஐ.டி. கம்பெனிகளுக்கும், அலுவலகங்களுக்கும் அனைவரும் விரையும் யுகம் இது. ஆம்... ஆழ்ந்த நித்திரையை அனுபவித்த தலைமுறை போய், இப்போது தூக்கத்தைக் கெடுக்கக்கூடிய உணவுப் பழக்கங்களுக்கு அடிமையாகி, கேளிக்கைகளால் தூக்கத்துடன் ஆரோக்கியமும் கெட்டு, துன்பத்தை விலை கொடுத்து வாங்குபவர்களின் சதவிகிதம்தான் இங்கு அதிகம். "தூக்கத்தைபோல் ஊக்கம் தரும் விஷயம் எதுவும் இல்லை. சோம்பலாகி சுருளாமல், நம்மை சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பது தூக்கம்தான். மனித உடம்புக்குத் தேவையான குறைந்தபட்ச ஆறு மணி நேர தூக்கம்கூட கிடைக்காமல் போனால், அது பல்வேறு விபரீதங்களில் கொண்டு போய் நிறுத்தும்" என ஆரம்பித்தார்... சென்னை அண்ணா நகரில் உள்ள 'நித்ரா இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் ஸ்லீப் அண்ட் சயின்ஸ்' என்ற கிளினிக்கின் இயக்குநர் டாக்டர் ராமகிருஷ்ணன். இவர், அமெரிக்காவில் தூக்கம் பற்றிய ஸ்பெஷல் சர்டிஃபிகேட் கோர்ஸ் முடித்த முதல் இந்தியர். தூக்கத்தின் தேவை பற்றியும், அது கிடைக்காமல் போவதால் ஏற்படும் நோய்கள் பற்றியும் விரிவாக விளக்கினார்... தூக்கம்தான் புத்துணர்ச்சி! "நோயில்லாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ நல்ல உணவு எப்படி அவசியமோ, அதேபோல சுகமான தூக்கமும் அவசியம். சாப்பிடும் உணவு ஜீரணமாவதைப் போல், அன்றாடம் நாம் சந்திக்கும் அத்தனை டென்ஷன்களும் நித்திரையில்தான் தொலைந்து போகிறது. அந்த தூக்கம்தான் மறுநாள் நம்மை புத்துணர்ச்சியாக வைக்கிறது. உணவு, உழைப்பு, ஓய்வு... இந்த மூன்றையும் சரியாக கடைபிடித்தால், Ôதூக்கமில்லையே' என்று ஏக்கப்பெருமூச்சு விடவேண்டியதில்லை. ஆனால், இயந்திரத்தனமாகிவிட்ட இந்த உலகத்தில் பலரும் இழக்கத் துணிவது தூக்கத்தைதான்" என்றவர், தூக்கம் என்ற அந்த உடல் இயக்கத்தை அறிவியல் முறையில் விளக்கினார். பத்துக்குள் படுக்கச் செல்லுங்கள்! "தினசரி நடவடிக்கைகளை மூளையில் உற்பத்தியாகும் நாளமில்லா சுரப்புகள்தான் தீர்மானிக்கின்றன. விடிகாலையில் இதன் சுரப்பு அதிகமாக இருப்பதால், நாமும் சுறுசுறுப்பாக இருக்கிறோம். பின் படிப்படியாக குறைந்து இரவில் சுரப்பு மிகவும் குறைந்துவிட, நாம் தூக்கம் கொள்கிறோம். இரவு ஒன்பது, பத்து மணிக்குள் படுக்க சென்று, காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். மதிய வேளையில் சாப்பிட்டதும் லேசாக தூக்கம் கண்ணை சொக்கும். 20 அல்லது 30 நிமிடம் தூங்குவதால் பிரச்னை இல்லை என்றாலும், ராத்திரி நன்றாக தூங்குபவர்கள் மதிய தூக்கத்தை தவிர்ப்பது நல்லது" என்ற டாக்டர், குழந்தைகள், பெரியவர் என்று அனைவருக்கும் தேவையான சராசரி தூக்க நேரம் பற்றி பேசினார். குழந்தைகளுக்கு பத்து மணி நேரம்! "பிறந்த பச்சிளம் குழந்தை 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்கும். வளரும் பருவத்தில் அதன் தூக்கம் குறைய ஆரம்பித்தாலும், பள்ளிக் குழந்தைகளுக்கு சுமார் பத்து மணி நேர தூக்கமாவது அவசியம். ஆனால், படிப்பு, டியூஷன், விளையாட்டு, எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸ் என்று அவர்களை சுற்றியுள்ள கமிட்மென்ட்களால் அவர்கள் ஆறு முதல் ஏழு மணி நேரம்தான் தூங்குகின்றனர். அதுவும் தொடர்ந்து தூங்குவதில்லை. இப்படி உடலுக்கு போதிய உறக்கமில்லாததன் விளைவே, அதீத திறமைகள் இருந்தும் சில குழந்தைகள் மிளிர முடியாமல் போவதற்கு காரணமாகிவிடுகிறது" என்றவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு குழந்தை யின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்... குழந்தைகள் இரவில் அலறினால் உஷார்! "ஒரு அம்மா -அப்பா, 'என் குழந்தை ராத்திரி முழுக்க தூங்காம கத்தறது. என்னன்னே தெரியலை...' என்று ஐந்து வயது குழந்தையுடன் என்னிடம் வந்திருந்தனர். 'ஸ்லீப் ஸ்டடி' டெஸ்ட் மூலம், இரவு நேரத்தில் அந்த குழந்தைக்கு மூளைக்குள் வலிப்பு வருவதை அறிந்தோம். கை, கால் உதறினால்தான் ஃபிட்ஸ் என்றில்லை. இது ஒருவகை ஃபிட்ஸ். எனவே, இரவில் குழந்தைகளின் தூக்கம் கெட்டு இடைவிடாமல் கத்தினால், சுதாரிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில், ஏதோ ஒரு உள் உபாதையே அவர்களைத் தூங்கவிடாமல் செய்யும் காரணியாக இருக்கலாம்" என்று அறிவுறுத்திய டாக்டர்.. இனிதான தூக்கத்துக்கு... இனிப்பான நினைவுகள்! "பெரியவர்களைப் பொறுத்தவரை ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவர்களுக்கான பரிந்துரை. ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப இந்த தூக்க நேரம் மாறுபடலாம். சிலருக்கு ஆறு மணி நேர தூக்கமே போதுமானதாக இருக்கலாம். வயதானவர்களுக்கு தூக்கத்தின் தன்மை, நேரம், மனநிலை, உடல்நிலையைப் பொறுத்து இந்த சராசரி தூக்க நேரம் மாறுபடும். சரியான தூக்கம் கிடைக்காத பட்சத்தில், ஏற்கனவே நோய்களின் பிடியில் இருப்பவர்களின் உடலின் நிலை இன்னும் மோசமாகும் என்பதால், சரியான தூக்க பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இரவினில் கசப்பான ஞாபகங்களை விடுத்து, இனிப்பான நினைவுகளை அசைபோடுவது, தூக்கத்தை அவர்களிடம் நெருங்கவிடும்" என்ற டாக்டர், தூக்கமின்மை பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்களின் நிலை பற்றித் தொடர்ந்தார். பெண்கள்தான் பரிதாபம்! "தூக்கமின்மையால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். ஏனென்றால், குடும்பம், கணவர், குழந்தை, வேலை என்று சுழலும் அவர்கள், தங்களின் தூக்கத்தை ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. டாக்டரிடம் போகும் நேரத்தில்கூட, வீட்டில் ஏதாவது வேலையில் ஈடுபடலாமே என்று நினைக்கின்றனர். வீடு, அலுவலகத்தில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து, அதை மனதில் போட்டு மறுகி, தூக்கமில்லாமல் தவிக்கின்றனர். தங்களுக்கென நேரம் ஒதுக்கிக்கொள்ளாமல், வீட்டில் கடைசி நபர் வரும் வரை கண்விழித்து காத்திருந்து, அவர்கள் சாப்பிட்ட பிறகு, சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். பாதி தூக்கத்துடன் அதிகாலை குக்கர் விசிலில், அன்றைய நாளை துவங்குகிறார்கள்..." என்றவர், இதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் பட்டியலிட்டார். "நோயின் வாசஸ்தலமே தூக்கமின்மைதான். இதனால், பி.பி., ஹார்ட் பிராப்ளம், ஸ்ட்ரோக், சுகர், மனஉளைச்சல் போன்ற நோய்கள் வரலாம். இயல்பான தூக்கம் இல்லாமல் போனால், கண் எரிச்சல், உடம்பு வலி, தலைவலி, தலைச்சுற்றல், சோர்வு, ஜீரணக்கோளாறு, மயக்கம் போன்ற எல்லா தொல்லைக்கும் ஆளாக நேரிடலாம். மாதக்கணக்கில் தூக்கமில்லாமல் தவிப்பவர்கள் மனநோய், மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகலாம். இவர்களுக்கு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் தந்துதான் குணப்படுத்தமுடியும். இந்தப் பிரச்னைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படும் அனைவருக்கும் பொதுவானது என்றாலும், பெண்களுக்கு இந்த பாதிப்புகள் பரவலாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன..." என்றவர், குடும்ப உறுப்பினர்கள் காட்டும் அக்கறையே பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கான அருமருந்து என்று தொடர்ந்தார்... வேலைகளைப் பகிர்ந்தால், இல்லை வில்லங்கம்! "குடும்பத்தினர் வீட்டு வேலைகளை சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம். 'ஆபீஸ்ல வேலை இருக்கு. வர லேட்டாகும். நீ தூங்கிடு. நான் வந்து போட்டு சாப்பிட்டுக்கறேன்...', 'ஆபீஸ்ல வொர்க் லோட் ஜாஸ்தியா இருந்தா, லேட்டா வீட்டுக்கு வந்த கையோட கிச்சன்குள்ள போக வேண்டாம். வெளியில சாப்பிட்டுட்டு தூங்குவோம்', 'காலையில நான் எழுந்து படிக்கும்போது நீங்க வந்து காபி போட்டுத் தர வேண்டாம்மா. பிளாஸ்க்ல வச்சுடுங்க... குடிச்சுக்கறேன்...' என்றெல்லாம் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால், பெண்களுக்கு நிம்மதியும், நிரந்தர தூக்கமும் கிடைத்து, எப்போதும் உற்சாகமான மனநிலையில் இருப்பார்கள்" என்றவர், தூக்கம் வராமல் சிலர் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பற்றியும் குறிப்பிட்டார். "தேவைப்பட்டால் தூக்கத்துக்காக மாத்திரைகள் போடுவதில் தவறில்லை. ஆனால், உங்கள் உடலின் தேவையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே அதை உட்கொள்ள வேண்டும். 'தூக்கம் வரல...' என்று தானாக தூக்க மாத்திரைகளை வாங்கி விழுங்குவது தவறு..." என்று எச்சரித்து முடித்தார் டாக்டர் ராமகிருஷ்ணன்!
|
No comments:
Post a Comment