17-09-2011 அன்று திருச்சியில் தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கச்
சார்பில் கூடிய தமிழகம் தழுவிய சுன்னத் வல் ஜமாஅத் கூட்டத்தில்
ஏகமனதாக நிறைவேற்றப் பெற்ற அரசு சம்பந்தமான தீர்மானங்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
1) தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு
மிகவும் குறைவாக இருப்பதால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்குரிய
பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. எனவே 3.5 விழுக்காட்டை உடனடியாக
7 விழுக்காடாக உயர்த்தித் தர வேண்டுமெனத் தமிழக அரசை சுன்னத் வல் ஜமாஅத்
கூட்டமைப்பு மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
2) இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக
வழங்கவேண்டுமெனக் கூட்டமைப்பு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3) பன்னெடுங் காலமாக வழக்கத்தில் உள்ள முஸ்லிம்களுடைய திருமணப் பதிவு முறையே
தொடரும் வகையில் அதனை ஏற்றுத் தகுந்த ஆணை பிறப்பிக்க சுன்னத் வல் ஜமாஅத்
கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறது. முஹல்லா மற்றும்
அரசு காஜிகளின் திருமணச் சான்றிதழை பாஸ்போர்ட் அலுவலகம் உள்ளிட்ட மத்திய-
மாநில அரசுத் துறை , அரசுத் துறை சார்ந்த மற்றும் தனியார் துறை அலுவலகங்கள்
ஏற்றுக் கொள்ளும் வகையில் மத்திய- மாநில அரசுகள் தக்க நடவடிக்கைகளை எடுக்க
சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
4) தமிழகத்தில் 95 விழுக்காட்டிற்கும் மேலாக சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த முஸ்லிம்
மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 95 விழுக்காட்டிற்கும் அதிகமான சுன்னத் வல் ஜமாஅத்
சார்ந்த பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், நிர்வாக அமைப்புகள், இயக்கங்கள் செயல்பட்டு
வருகின்றன. எனவே இதனை உணர்ந்து தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவர்,
தமிழ் நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் முதலான பொறுப்புகளுக்கு சுன்னத் வல் ஜமாஅத்தைச்
சார்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்படும் வகையில் ஆவன செய்யவேண்டுமெனத்
தமிழக அரசை சுன்னத் வல் ஜமாஅத் கூட்டமைப்பு மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment