வரதட்சணை கேட்ட மணமகனுக்கு தர்ம அடி கொடுத்த மணப்பெண்!
திருமண ஏற்பாட்டின்போதே வரதட்சணை உள்ளிட்ட விவரங்கள் பேசி முடிக்கப்படுகின்றன. ஆனாலும், பேராசை கொண்ட மணமகன் மற்றும் மணமகனின் உறவினர்கள், திருமணமான பின்னர், மணமகள் வீட்டில் இருந்து இன்னும் ஏதாவது பிடுங்க முடியுமா? என்று கொடூரமாக சிந்திக்கின்றனர்.
மணமகள் வீட்டினர் வசதி படைத்தவர்கள் என்றால் பிரச்சினை கிடையாது. ஏழையாகவோ அல்லது திருமணத்தால் கடனாளியாகவோ மாறிப் போனவர்களின் குடும்பப் பெண்களின் நிலைமையோ சிக்கல்தான்.
மணமகன் வீட்டாரின் பேராசைக்கு பலியாவது அப்பாவி பெண்கள்தான் என்றில்லை, படித்த பெண்களும் தப்புவதில்லை. இந்தியாவில் வரதட்சணைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும் வரதட்சணை கொடுமைகளை தடுக்கவோ, குறைக்கவோ முடியவில்லை.
வரதட்சணை சாவுகள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. போலீஸ் ஆவணங்களில் பதிவாகி இருக்கும் வரதட்சணை சாவுகள் விவரம் வருமாறு:-
கடந்த 2000-ம் ஆண்டில் வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த அல்லது தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 6995 ஆகும். இதன் எண்ணிக்கை 2010-ம் ஆண்டில் 8391 ஆக உயர்ந்துள்ளது. பத்து ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது.
நாட்டில் சராசரியாக மணிக்கு ஒரு பெண் தீக்குளிக்கிறாள். அல்லது தீ வைத்துக் கொளுத்தப்படுகிறாள். வரதட்சணை கொடுமை புகார்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வந்த போதிலும், இவ்வழக்கில் தண்டனை பெறுபவர்களின் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
புகார் கொடுக்க பயந்து மூடிய கதவுகளுக்குள் சித்ரவதைகளை லட்சக்கணக்கான இளம்பெண்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது
சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இது குறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இருப்பது தெரிந்தது. போலீசார், பெங்களூரு சென்று சதீஷை வாணியம்பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது சதீஷ், "நாட்டறாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்து தன்னை திருமணம் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட்சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்டதாகவும் கூறிய சதீஷ், 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வதாக' கூறினார்.
அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போதைக்கு, 25 சவரன் நகைகள் தான் போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாக பத்திரம் எழுதிக் கொடுப்பதாக கூறினர். "இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திருமணம் செய்து கொள்வோம்' என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து வெளியேறினர்.இதைக் கேட்ட பிரீத்தி ஆத்திரமடைந்தார். "நகைக்காக திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடியவரை திருமணம் செய்ய மாட்டேன்' என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட்டினார்
Thanks to Brother Abdul Aleem - KNR.








No comments:
Post a Comment