திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
திக்ருகளின் சிறப்புகள் :
فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ
'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152)
நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ
'(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205)
திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான்.
يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42)
அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல.
لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم)
'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்)
திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும்.
மற்றொரு ஹதீஸில்,
அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள்.
பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள்.
அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள்.
பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள்.
அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள்.
பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
மற்றொரு ஹதீஸில்,
அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்
1 comment:
This is my first visit to the site very interesting.For latest updatesLatest Tamil News Today
Post a Comment